புத்ராஜெயா, பிப் 8 – இவ்வாண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு மனித வள அமைச்சான கெசுமா, அதன் கெசுமா மடாணி திட்டத்தைத் தொடருகிறது.
கடந்தாண்டு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் சிலாங்கூர் பத்து மலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயிலிலும், பினாங்கு தண்ணீர் மலை அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயத்திலும் கெசுமாவின் சேவைகள் வழங்கப்படும்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அதனை அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்தார்.
பத்து மலையில் 700 பேரும் தண்ணீர் மலையில் 500 பேரும் அமர்ந்து ஓய்வெடுக்க வசதி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தைப்பூசம் அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த ஓய்வெடுக்குப் பகுதிகள் செயல்படும்.
தைப்பூசம் சிறப்பாக நடந்தேறுவதை உறுதிச் செய்ய முழு மூச்சாய் பாடுபடும் காவல்துறை, `Alam Flora` துப்புரவுப் பணியாளர்கள், நகராண்மைக் கழக ஊழியர்கள் போன்ற களப் பணியாளர்களுக்கும் ஓய்வெடுக்க சிறப்பு வளாகம் ஏற்பாடு செய்யப்படும்.
சம்பந்தப்பட்ட அனைவரின் வசதிக்காக அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதே சமயம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பக்தர்களுக்கு உதவும் வகையில் பத்து மலையில் 300 தன்னார்வலர்களும், தண்ணீர் மலையில் 200 தன்னார்வலர்களும் சேவையில் ஈடுபடுவர்.
இது தவிர, இலவச சுகாதார பரிசோதனை, தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் அறை, வேலை வாய்ப்புகள் தொடர்பான ஆலோசனைச் சேவைகள், பாதுகாப்புப் பயிற்சி குறித்த விளக்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கெசுமா மடாணி திட்டத்தில் வழங்கப்படும் வாய்ப்புகளையும் வசதிகளையும் தைப்பூசத்துக்கு வரும் பக்தர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வார்கள் என ஸ்டீவன் நம்பிக்கைத் தெரிவித்தார்.


