கோலாலம்பூர் பிப் 7- மலேசிய இந்து பெருமக்கள் அனைவரும் தைப்பூச திருவிழாவை அமைதியாக மகிழ்ச்சியுடன் கொண்டாட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்தினார்.
பிரதமரின் இன்றைய பத்துமலை வருகை பொருள் பொதிந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவர் பிரதமரான பின் முதல் முறையாக மேற்கொள்ளும் இவ்வருகை, பிரதமர் கடந்த ஆண்டுகளில் பத்து மலைக்கு வராததற்கு பல்வேறு காரணங்களைப் புனைந்தவர்களின் முகத்தில் கறி பூசிய துடன், கடந்த வாரம் சமய விவகார அமைச்சர், முஸ்லிம் அல்லாதவர்களின் சமய நிகழ்வுகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்ள முன்மொழிந்த சில கோட்பாடுகள் சர்ச்சையை கிளப்பி விட்ட நிலையில், பிரதமரின் இன்றைய பத்துமலை வருகை அமைச்சருக்கும், பிரதமரைச் சாடுவதையே நோக்கமாகக் கொண்ட பல விமர்சகர்களுக்கும் சரியான பதிலாக அமைந்தது. 
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்து மலைக்கு மேற்கொண்ட இன்றைய சிறப்பு வருகையின் போது தைப்பூச விழாவின் ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன், அங்கு புதிதாக மேற்கொள்ள படவிருக்கும் பல்நோக்கு மண்டபம், மின் படிக்கட்டு ஆகிய திட்டங்கள் குறித்தும் ஆலயத் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா பிரதமருக்கு விளக்கம் அளித்தார்.
பல அபிவிருத்திகள் வாயிலாகத் தேவஸ்தானம் பத்துமலையை சிறந்த வழிபாடு மற்றும் சுற்றுலா தளமாக உயர்த்தி இருந்தாலும், அங்கு மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து உரிய அரசு நிறுவனங்கள் சரியான ஆய்வுகளுக்குப் பின் அனுமதியளிக்கும், குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் காரணமின்றி எதற்கும் தடையாக இருக்காது என்று டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்
மேலும், இவ்வேளையில் இந்து மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்தைக் கூறி தைப்பூச விழாவை அமைதியுடன் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.


