கோலாலம்பூர், பிப் 7- சிகிரெட்டுகள் மற்றும் மதுபானங்களைக் கடத்தும்
மற்றும் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும்
கும்பலை அரச மலேசிய போலீஸ் படை முறியடித்துள்ளது. மொத்தம் 44
லட்சத்து 50 வெள்ளி மதிப்பிலான வரி விதிக்கப்படாத கடத்தல்
பொருள்கள் சபா மாநிலத்தின் கெனிங்காவ் பகுதியிலுள்ள மூன்று
வளாகங்கள் மீது கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில்
பறிமுதல் செய்யப்பட்டன.
இங்கு மேற்கொள்ளப்பட்ட ஓப் தாரிங் அல்பா 1 மற்றும் அல்பா 2
ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஒரு உள்நாட்டு ஆடவர், ஒரு பெண்
உள்ளிட்ட நான்கு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டதாகப் புக்கிட்
அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின்
இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் கூறினார்.
இந்த சோதனையில் நாங்கள் பல்வேறு வகையிலான 4,603 கார்ட்டன்
மதுபானங்கள், 3,210 கார்ட்டன் சிகிரெட்டுகள் நான்கு வாகனங்கள், மூன்று
கைப்பேசிகள் உள்பட சுமார் 40 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்களை
கைப்பற்றினோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கைது நடவடிக்கையின் மூலம் கெனிங்காவ் வட்டாரத்தில்
தீவிரமாகச் செயல்பட்டு வந்த சுங்க வரி செலுத்தப்படாத சிகிரெட்டுகள்
மற்றும் மதுபானங்களைக் கடத்தி வந்த கும்பலை நாங்கள் வெற்றிகரமாக
முறியடித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் 1967ஆம் ஆண்டு சுங்கச் சடத்தின்
135(1(டி) வது பிரிவு மற்று 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின்
6(1)(சி) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர்
குறிப்பிட்டார்.
இதனிடையே, இவ்வாண்டு ஜனவர் முதல் தேதி தொடங்கி கடந்த
திங்கள்கிழமை வரை நடத்தப்பட்ட 46 சோதனை நடவடிக்கைகள் மூலம்
வரி செலுத்தப்படாத மற்றும் மானிய விலை பொருள்களை கடத்தியது,
விலங்குகளை கடத்தியது, போலி ஆயுதங்களை விற்பனை செய்தது
உள்ளிட்ட குற்றங்களுக்காக 51 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்
சொன்னார்.


