கங்கார், பிப். 7 - இங்கு, சாங்லாங்கில் உள்ள ஒரு உணவுக் கடையில் புதிதாக தனது பெண் குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டை அக்கடையின் உதவியாளர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தனக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 29 வயதான நோர் ஜைனாப் ஜமாலுடின் என்ற அப்பெண் அதனை ஒப்புக்கொண்டார்.
கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிகாலை 6.30 மணியளவில் சங்லாங், கம்போங் ராமாவில் உள்ள ஒரு உணவுக் கடையில் தான் பெற்றெடுத்த பெண் குழந்தையை கைவிட்டதாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின் கீழ் ஜைனாப் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்
அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் தெங்கு ருகையா தெங்கு ஷாஹ்ரோம் வழக்கை நடத்தும் வேளையில் அந்தப் பெண்ணின் சார்பாக தேசிய பாதுகாப்பு உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்தி ஹாஜார் சே அகமது ஆஜரானார்.
பின்னர் ரசாயன மற்றும் தடயவியல் அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக வழக்கிற்கான புதிய தேதியை நிர்ணயிக்குமாறு தெங்கு ருக்கையா நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
நோர் ஜைனாப்பை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 6,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட் அனா ரோசானா முகமது நோர், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


