கோலாலம்பூர், பிப் 7 – கடந்தாண்டு எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியின் மூலம் அரசாங்கத்துக்கு 44.7 பில்லியன் ரிங்கிட் வருமானம் கிடைத்திருப்பதாக நிதியமைச்சு கணித்திருக்கிறது.
ஆனால், 2024-ஆம் ஆண்டுக்கான ஆரம்ப இலக்கு வெறும் 41.3 பில்லியன் மட்டுமே ஆகும்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் அமைச்சு இவ்வாறு கூறியது.
மேலும், 2019 முதல் 2024 வரை சீனி சார் பானங்களுக்கு கலால் வரியாக மொத்தம் 447.5 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமானங்களின் மூலம் கிடைத்த நிதி, நீரிழிவு சிகிச்சைக்கான SGLT-2 தடுப்பான்களின் விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் கடைசிக் கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான டயாலிசிஸ் உள்ளிட்ட பொது சுகாதார செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக அமைச்சு விளக்கியது.
கடந்தாண்டு அக்டோபரில் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்த போது ஜனவரி தொடங்கி சீனி பானங்கள் மீதான கலால் வரியை லிட்டருக்கு 40 சென் உயர்த்துவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


