ஈப்போ, பிப். 7 - அடுத்த வாரம் மலேசியாவுக்கு வருகை புரியவிருக்கும் துருக்கிய அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகனுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்தவிருக்கும் சந்திப்பில் காஸா மீட்பு மற்றும் மறுநிர்மாணிப்பு முக்கிய இடத்தைப் பெறும்.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை உட்பட இஸ்லாமிய உலகைப் பிரதிநிதித்து கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் குரல் கொடுப்பதிலும் இவ்விரு தலைவர்களும் முக்கியப் பங்கு வகிப்பதால் இவ்விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் கூறினார்.
காஸா பகுதியைக் கைப்பற்றும் திட்டத்தை அமெரிக்க அதிபர் அறிவித்த பிறகு இது மிகவும் முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
பழைய நண்பர்களான இந்த இரண்டு முக்கியத் தலைவர்களுக்கும் (அன்வார் மற்றும் எர்டோகன்) இடையிலான சந்திப்பு காஸாவை மீண்டும் மறுநிர்மாணிப் செய்வதற்கான வழியைக் கண்டறியும் அனைத்துலக சமூகத்தின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்கு நடைபெற்ற ரூமா ஈபு திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் சார்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
பாலஸ்தீனர்களை வேறு இடங்களில் மறுகுடியேற்றம் செய்தப் பின்னர் காஸா பகுதியை அமெரிக்கா "கையகப்படுத்தும்" என்று அதிபர் டோனால்ட் டிரம்ப் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்த மறுவளர்ச்சித் திட்டத்தின் கீழ் காஸா பகுதியை 'மத்திய கிழக்கின் ரிவியராவாக' மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.


