கோலாலம்பூர், பிப் 7 – தைப்பூசத்தை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிறு இரவு தொடங்கி பிப்ரவரி 14 வரை பத்துமலையைச் சுற்றியுள்ள 7 சாலைகள் கட்டங்கட்டமாக மூடப்படும்.
சுமூகமானப் போக்குவரத்தை உறுதிச் செய்ய அச்சாலைகளை மூட வேண்டியுள்ளதாக, சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
கம்போங் மெலாயு பத்து கேவ்ஸ் சாலை சமிக்ஞை சந்திப்பு, பத்து மலை அருகேயுள்ள MRR2 turnoff, பத்து மலையை நோக்கிச் செல்லும் ஜாலான் பெருசாஹான், ஶ்ரீ கோம்பாகிலிருந்து சுசூர் பெருசஹான் நோக்கிச் செல்லும் MRR2 turnoff உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட சாலைகளாகும்.
மேலும், ஜாலான் ஶ்ரீ பத்து கேவ்ஸ் 8/ ஜாலான் பத்து கேவ்ஸ் லாமா சாலை சந்திப்பு, ஶ்ரீ பத்து கேவ்ஸ் சமிக்ஞை விளக்குப் பகுதி; பத்து கேவ்ஸ் bypass தொடங்கி பத்து மலை முதன்மை நுழைவாயில் நோக்கிச் செல்லும் ஆகியவை மூடப்படும் பிற சாலைகளாகும்.
சாலைகள் மூடப்படுவது தொடர்பான அறிவிப்புகள், வாகனமோட்டிகளின் வசதிக்காக பத்து மலை `roundabout`இல் உள்ள மின்னியல் அறிவிப்புப் பலகைகளில் இடம்பெறும்.
கோம்பாக் காவல்துறை தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் அத்தகவல்கள் இடம்பெறும் என டத்தோ ஹுசேய்ன் சொன்னார்.
இவ்வாண்டு பத்து மலை தைப்பூசத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், 1,306 காவல்துறையினர் பணியில் ஈடுபடுவர் என்றும் அவர் சொன்னார்.
பத்து மலைக்கு சொந்த வாகனங்களில் வருவோர், ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்; அதோடு அவை முறையாகப் பூட்டப்படுவதையும் அவர்கள் உறுதிச் செய்ய வேண்டும்.
கோயில் வளாகத்தில் ட்ரோன்களை பறக்க விடவும் அனுமதியில்லை; அப்படி பறக்க விட விரும்புவோர், முதலில் மலேசிய பொது விமானப் போக்குவரத்து அதிகாரத் தரப்பிடம் அனுமதி வாங்க வேண்டும் என டத்தோ ஹுசேய்ன் நினைவுறுத்தினார்.


