கோலாலம்பூர், பிப். 7- உச்ச நெரிசல் நேரங்களில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து தடை கிள்ளான் பள்ளத்தாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கி விரிவுபடுத்தப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைகளிலும் நகரத்திலும் போக்குவரத்து நெரிசலை சீராக்கும் நோக்கில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (லுவாஸ்), புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (என்.கே.வி.இ.), வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் மத்திய இணைப்பு (இலிட்) மற்றும் டூத்தா-உலு கிளாங் விரைவுச்சாலை (டியுக்) ஆகியவை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைகளாகும் என எல்.எல்.எம். தலைமை இயக்குநர் டத்தோ சசாலி ஹருண் கூறினார்.
இந்தத் தடையை அமல்படுத்தும் உத்தரவு கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி அரசாங்க அரசிதழில் வெளியிடப்பட்டது என்றும் இது சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் முயற்சிகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் தடை அமலாக்கத்தில் 2ஆம் மற்றும் மூன்றாம் பிரிவு கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அவை இரண்டு அச்சுகள் மற்றும் ஆறு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் (பேருந்துகள் தவிர) மற்றும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் (பேருந்துகள் தவிர) கொண்ட 3ஆம் பிரிவு வாகனங்கள் ஆகும்.
இருப்பினும், வீட்டுக் கழிவுகளை சுத்தம் செய்வது அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடும் கனரக வாகனங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவசர மற்றும் அமலாக்க சேவைகள் மற்றும் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் கனரக வாகனங்களும் இதில் அடங்கும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


