NATIONAL

காஸாவில் 47,500க்கும் மேற்பட்டோர் பலி - இடிபாடுகளுக்கு மத்தியில் மேலும் உடல்கள் கண்டெடுப்பு

7 பிப்ரவரி 2025, 2:47 AM
காஸாவில் 47,500க்கும் மேற்பட்டோர் பலி - இடிபாடுகளுக்கு மத்தியில் மேலும் உடல்கள் கண்டெடுப்பு

அங்காரா, பிப். 7-   காஸா பகுதியில் இடிபாடுகளிலிருந்து மேலும் 28 பேரின உடல்களை பாலஸ்தீன மருத்துவ மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

இதன் மூலம்  கடந்த  2023 அக்டோபர்  முதல்  இஸ்ரேல் நிகழ்த்தி வரும்  இனப்படுகொலைப் போரில் மொத்த இறப்பு எண்ணிக்கை 47,583 ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் மற்றும் காயமடைந்த ஒருவரும் அடங்குவர் என அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111,633 ஆக உயர்ந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

மீட்பு குழுவினரால்  மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத காரணத்தால்   பாதிக்கப்பட்ட பலர்  இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலையிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 19ஆம் தேதி காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது முதல்   562 உடல்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் பகுதியில் பரவலான அழிவை ஏற்படுத்திய இஸ்ரேலியப் போரை நிறுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

காஸாவில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லண்ட் ஆகியோருக்கு எதிராக அனைத்துலக  குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  கைது ஆணை பிறப்பித்தது.

காஸா பகுதியில் போர் தொடுத்ததற்காக இஸ்ரேல் அனைத்துலக  நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கையும் எதிர்கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.