கோலாலம்பூர், பிப். 7- இல்லாத முதலீட்டுத் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட
வங்கி அதிகாரி மற்றும் பெண் விற்பனை நிர்வாக அதிகாரி ஆகியோர்
மோசடிக் கும்பலிடம் 23 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை
பறிகொடுத்தனர்.
இந்த மோசடி தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கடந்த மாதம்
தாங்கள் புகாரைப் பெற்றதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்
துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
ஐம்பத்தைந்து வயதான வங்கி அதிகாரியும் வர்த்தக நிர்வாக அதிகாரியான
57 வயது பெண்ணும் கடந்த மாதம் 25 மற்றும் 31ஆம் தேதிகளில் புகார்
செய்தனர் என்று நேற்று இங்குள்ள வர்த்தக குற்றபுலனாய்வுத் துறை
தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
யு.வி.கே.எக்ஸ்.இ. எனும் செயலி வாயிலாக தாம் 18 லட்சத்து 70 ஆயிரம்
வெள்ளியை முதலீடு செய்ததாக வங்கி அதிகாரி கூறிய வேளையில்
ஆர்க்காடியா இக்குய்ட்டி செயலி மூலம் 466,800 வெள்ளியை தாம் முதலீடு
செய்ததாக அந்த பெண்மணி தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
ஆர்க்காடியா இக்குய்ட்டி திட்டத்தின் வாயிலாக முதலீட்டுத்
தொகையிலிருந்து 70 விழுக்காடு வரை லாபம் ஈட்டலாம் என்ற
விளம்பரத்தால் விற்பனை அதிகாரி ஈர்க்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பத்து வெவ்வேறு வங்கி கணக்குகளில் 10
பரிவர்த்தனைகள் மூலம் 466,800 வெள்ளியை செலுத்தியுள்ளார். எனினும்
வாக்குறுதியளித்தபடி லாபம் கிடைக்காததைத் தொடர்ந்து இது குறித்து
போலீசில் புகார் செய்தார் என ரம்லி கூறினார்.
வங்கி அதிகாரியோ வாட்ஸ்ஆப்பில் வெளியான 10 முதல் 50 விழுக்காட்டு
லாபம் பெறலாம் என்ற யு.வி.கே.எக்ஸ்.இ. முதலீட்டு திட்ட விளம்பரத்தின் பால் கவரப்பட்டு 17 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியை பத்து வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளார் என அவர் சொன்னார்.
இந்த இரு முதலீட்டத் திட்டங்களில் 2 கோடியே 83 வெள்ளி
ஏமாற்றப்பட்டது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தாங்கள்
இதுவர 41 புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


