ஷா ஆலம், பிப். 6 - அட்டைப் பெட்டி உற்பத்தி மற்றும் அச்சிடும் நிறுவனத்தால் நதியில் உண்டான மாசுபடு காரணமாக சுங்கை காபூல் ஆற்றுக்கும் அதனைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியத்தின் (லுவாஸ்) துரித நடவடிக்கையால் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டது.
லுவாஸின் இந்த கண்டுபிடிப்பு சுங்கை காபூல் ஆற்றில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நீர் நிறம் மாறிய சம்பவங்களை அடையாளம் காண உதவியது என்று மாநில சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
அந்த வளாகத்தில் கழுவப்படும் கழிவுகளின் தடயங்கள் பிரதான கழிப்பறை குழியில் உள்ள கழிவுநீரின் நிறத்துடன் பொருந்தியது சோதனையில் தெரியவந்தது என்று அவர் சொனானார்.
வழிமாற்றுக் குழாய் மற்றும் கழிவுநீர் குழியில் நீர் நீல நிறமாக காணப்பட்டதற்கு மாசுபாடே காரணம் என்பதை சரிபார்ப்பை நடத்தி லுவாஸ் குழு உறுதிப்படுத்தியது என அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து காஜாங் நகராண்மைக் கழகமும் சுற்றுச்சூழல் துறையும் அந்த வர்த்தக வளாகத்தின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தியுள்ளன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 15ஆம் தேதி சுங்கை காபூல் ஆற்றுநீர் இளஞ்சிவப்பாக நிறமாற்றம் கண்ட சம்பவத்திற்குப் பிறகு காஜாங் நகராண்மைக் கழகத்தால் சீல் வைக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத இடைமாற்றுக் குழாயில் நேற்று நண்பகல் அளவில் நீல நீர் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
நீர் வளங்களை மாசுபடுத்திய குற்றத்திற்காக 1999ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் 79(4)வது பிரிவின் கீழ் லுவாஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
லுவாஸ் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு அனைத்து கண்டுபிடிப்புகளையும் தேசிய நீர் சேவைகள் ஆணையத்துடன் பகிர்ந்து கொண்டு மேல் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.


