ஷா ஆலம், பிப். 6 - சிலாங்கூர் மாநிலச் செயலாளரும் மாநில நிதி அதிகாரியும் இன்று மாநில ஆட்சிக்குழு மன்ற குழுவின் உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் டத்தோ டாக்டர் அகமது பாட்ஸ்லி அகமது தாஜூடின் மற்றும் டத்தோ டாக்டர் ஹனிப் ஜைனல் அபிடின் ஆகியோர் மந்திரி புசார் முன்னிலையில் உறுதிமொழி கடிதத்திலும் ரகசியக் காப்புப் பிரமாணத்திலும் கையெழுத்திட்டனர்.
பின்னர் இருவரும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஐம்பத்து மூன்று வயதான அகமது பாட்ஸ்லி, 1996ஆம் ஆண்டு அரச தந்திர நிர்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். முன்பு தேசிய பொது நிர்வாக கழகத்தில் (இந்தான்) மேலாண்மை மேம்பாடு மற்றும் புதுமை பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (யுஎஸ்எம்) வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்ற இவர், கடந்த 2021 முதல் மாநில நிதி அதிகாரி பதவியை வகித்து வருகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
இதற்கிடையில், இந்தானில் மூத்த துணை இயக்குநராக (திறன் மேம்பாடு) பணியாற்றிய ஹனிஃப், அகமது பாட்ஸ்லிக்குப் பதிலாக மாநில நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


