NATIONAL

பாலஸ்தீனர்களின் கட்டாய மறு குடியேற்றத்தை  மலேசியா நிராகரிக்கிறது-  இரு நாட்டுத் தீர்வில் உறுதியாக உள்ளது

6 பிப்ரவரி 2025, 7:01 AM
பாலஸ்தீனர்களின் கட்டாய மறு குடியேற்றத்தை  மலேசியா நிராகரிக்கிறது-  இரு நாட்டுத் தீர்வில் உறுதியாக உள்ளது

புத்ராஜெயா, பிப். 6 - பாலஸ்தீனர்களின் கட்டாய இடப்பெயர்வுக்கு  வழிவகுக்கும் எந்தவொரு திட்டத்தையும் மலேசியா கடுமையாக நிராகரிக்கிறது. இது அனைத்துலகச் சட்டங்களையும்  ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) பல  தீர்மானங்களை மீறுவதாக உள்ளது என அது  கூறியது.

பாலஸ்தீனர்களின்  சுயநிர்ணய உரிமையை  கீழறுப்பதற்கு  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒருதலைப்பட்ச முயற்சியும்  ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதோடு அது மோதலை மேலும் நீடிக்கச் செய்யும் என்றும் வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மலேசியா பாலஸ்தீன மக்களுடன் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்கிறது. மத்திய கிழக்கில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான ஒரே சாத்தியமான  வழி 1967க்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு ஜெருசலமை  தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவுவது மட்டுமே  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான மற்றும் நிரந்தர தீர்வை வலியுறுத்துவதில் அனைத்துலகச்  சமூகம் ஒன்றுபட வேண்டும் என்று அரசாங்கம் கோரிக்கை  விடுத்தது.

இதன் தொடர்பில்  கடந்த  2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி   நடைபெற்ற சிறப்பு  அரபு-இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டின் தீர்மானத்தை மலேசியா எதிரொலித்தது. இரு நாட்டுத்  தீர்வை இன்னும் ஆதரிக்காத அனைத்து நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரித்து ஐ.நா.வில் அதன் முழு உறுப்பினர் அந்தஸ்தை  ஆதரிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

வாஷிங்டன் காஸாவை "கையகப்படுத்தி" அதை மறுவடிவமைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கடந்த  புதன்கிழமை பரிந்துரைத்ததாக அனைத்துலக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த திட்டம் அனைத்துலகச்  சட்டத்தை மீறுவதாகவும் பாலஸ்தீன உரிமைகளை புறக்கணிப்பதாகவும் உள்ளதாகக் கூறி பரவலாக கண்டனம்  தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.