கோலாலம்பூர், ஜன. 6- பூச்சோங் நகர மையத்திலுள்ள மேடான் செலேரா
எனப்படும் உணவு விற்பனை வளாகம் மீது குடிநுழைவுத் துறை நேற்று
முன்தினம் நடத்திய அதிரடிச் சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக
58 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அந்த அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 102 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்ட வேளையில் அவர்களில் 58 பேர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியாக ஷபான் கூறினார்.
அவர்கள் புரிந்த குற்றங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம்
நாட்டில் தங்கிருந்தது, தற்காலிக பணி அனுமதியைத் தவறாகப்
பயன்படுத்தியது, சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் புரிந்தது
ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்களில் 31 ஆண்கள் மற்றும் 10 பெண்களை
உள்ளடக்கிய மியன்மார் நாட்டினர், இந்தோனேசியாவைச் சேர்ந்த இரு
ஆடவர்கள் மற்றும் ஒரு பெண், நான்கு இந்தியர்கள் மற்றும் ஒரு
வியட்னாமியர் ஆகியோரும் அடங்குவர் என அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட18 முதல் 40 வயது வரையிலான அனைவரும் மேல்
நடவடிக்கைக்காக புக்கிட் ஜாலில் உள்ள குடிநுழைவுத் துறையின் தடுப்புக்
காவல் முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத் துறை, தேசிய பதிவுத்
துறை, மலேசிய பொது தற்காப்பு படை, மனித வர்த்தகம் மற்றும் புலம்
பெயர்ந்தோர் தடுப்பு பிரிவு, சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்தடுப்பு
பிரிவு ஆகிய துறைகளைச் சேர்ந்த 95 அதிகாரிகளும் உறுப்பினர்களும்
பங்கேற்றதாக அவர் கூறினார்.
பொது மக்களின் புகார் மற்றும் கடந்த ஒரு வார காலமாக அங்கு
மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் வாயிலாக இந்த அதிரடிச்
சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.


