புத்ராஜெயா, பிப் 6: தற்போது இருக்கும் இருவழி உறவை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தை மலேசியாவும் உஸ்பெகிஸ்தானும் உணர்ந்துள்ளன.
அதோடு, எதிர்காலத்தில் வியூக கூட்டாண்மை நிலைக்கு, உறவை உயர்த்துவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டையும் அவை வெளிப்படுத்தியுள்ளன.
அந்த இலக்குகளை அடைவதற்கு, வர்த்தகம் மற்றும் விரிவான ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
உஸ்பெகிஸ்தான் அதிபர், ஷவ்கட் மிர்சியோயேவ் மலேசியாவிற்கு மேற்கொண்டிருக்கும் இரண்டு நாள்கள் அதிகாரப்பூர்வ வருகையை முன்னிட்டு, இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அந்த நிலைப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகளின் முழு திறனையும் உணர்ந்து, இரு தலைவர்களும் பல்வேறு நிலைகளில் தொடர்புகள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பைப் பராமரிப்பதோடு, அனைத்துலக மன்றங்கள் மற்றும் மாநாடுகளில் முக்கிய உலகளாவிய பிரச்சனைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஒப்புக்கொண்டனர்.
முன்னதாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற பின்னர், மலேசியாவிற்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் மிர்சியோயேவுக்கு, பெர்டானா புத்ராவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் அவர் சந்திப்பு நடத்தினார்.
2025-ஆம் ஆண்டு ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்றிருப்பதற்காக அன்வார் இப்ராஹிமிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்த மிர்சியோயேவ், தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.


