கோலாலம்பூர், பிப். 6 - தைப்பூச தினத்தை முன்னிட்டு நிலைமையைக் கண்காணிக்க சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த மொத்தம் 1,500 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பத்துமலை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோரில் பொதுப் படை பிரிவினர், போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை, மத்திய ரிசர்வ் படை மற்றும் சிறப்புப் படை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களும் அடங்குவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக நிலையில் விவாதிக்கப்பட்டு தைப்பூச காலம் முழுவதும் 1,500 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை பணியில் அமரத்த முடிவு செய்யப்பட்டது, என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.
இதற்கிடையில், இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பதாதுமலையில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்று ஆலயத் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா குறிப்பிட்டார்.
வெள்ளி இரத ஊர்வலம் வரும் 9ஆம் தேதி தலைநகர் ஜாலான் துன் எச்.எஸ். லீ, உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிலிருந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் தொடங்கும் என்று அவர் சொன்னார்.
நேற்று பத்துமலையிலுள்ள உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலிலில் நடைபெற்ற தைப்பூசம் 2025 தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
காவடி எடுப்போர் சமய நெறிகளுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு செயலிலும் ஈடுபட்டால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார.
தைப்பூசத்தின் போது விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக கோலாலம்பூர் காவல்துறை மற்றும் சிலாங்கூர் காவல்துறையினருடன் ஆலய நிர்வாகம் பல சந்திப்புகளை நடத்தியுள்ளது. தைப்பூச விழா சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மலேசிய தன்னார்வத் துறை உறுப்பினர்களும் கோயில் தன்னார்வத் தொண்டுப் படையினரும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


