நியுயார்க், பிப். 6- காஸாவில் இன அழிப்பை மேற்கொள்வதை
தவிர்க்கும்படி அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பை ஐக்கிய நாடுகள்
சபையின் (ஐ.நா.) அந்தோனியோ குட்ரெர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனர்களை வேறு இடத்தில் குடியமர்த்தியப் பின்னர் போரினால்
சீர்குலைந்துள்ள காஸாவை அமெரிக்கா தன்வசம் எடுத்துக்
கொள்ளப்போவதாக டிரம்ப் கூறியது தொடர்பில் அந்தோனியோ இந்த
கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் நாம் பிரச்சனைகளை
மேலும் பெரிதாக்கிவிடக் கூடாது. அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்ப
நாம் நடந்து கொள்வது முக்கியமாகும். இன அழிப்பு ரூபத்திலான எந்த
நடவடிக்கையையும் நாம் தவிர்ப்பது முக்கியம் என்று அவர் ஐ.நா
செயல்குழு கூட்டத்தில் கூறினார்.
இரு நாட்டுத் தீர்வு நாம் மறுவுறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார். இந்த செயல்குழு கூட்டத்தில் டிரம்ப் குறித்தோ அவரின்
காஸா பரிந்துரை குறித்தோ அந்தோனியோ எதனையும்
குறிப்பிட்வில்லை.
அந்தோசியோ நேற்று ஜோர்டான் மன்னர் அப்துல்லாவைத் தொடர்பு
கொண்டு பிராந்திய நிலவரம் குறித்து விவாதித்ததாக அவரின் பேச்சாளர்
ஸ்டீபன் டூஜாரிக் தெரிவித்தார்.
அடுத்த வாரம் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் போது அரபு
நாடுகளின் ஒருமித்த கருத்தை மன்னர் அப்துல்லா வெளியிடுவார் என
பாலஸ்தீன நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கான ஐ.நா.
பிரதிநிதி ரியாட் மன்சோர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனம் தவிர எங்களுக்கு வேறு நாடு கிடையாது. காஸா அதில்
முக்கியமான ஒரு பகுதியாகும். நாங்கள் ஒருபோதும் காஸாவை விட்டு
வெளியேற மாட்டோம் என அவர் சொன்னார்.


