ஷா ஆலம், பிப். 6 - தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் தேவஸ்தானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 300 தற்காலிக கடைகள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டன.
பல்வகைப் பொருட்கள், உணவு, பானங்கள் மற்றும் மருதாணி ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அதிகமாக அதாவது 175 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கு அடுத்த இடத்தில் முடிதிருத்தும் மற்றும் பச்சை குத்தும் வர்த்தகம் (51), தற்காலிக வர்த்தகம் (19) மற்றும் நடமாடும் வர்த்தகம் (10) ஆகியவை உள்ளதாக செலாயாங் நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.எஸ்.) வர்த்தகப் பிரிவு கூறியது.
இவை தவிர, அரசு சாரா நிறுவனங்களுக்கு 28 இடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு 30 சதவீத தள்ளுபடியில் 15 இடங்களும் வழங்கப்பட்டன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 298 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன என்று அது மேலும் தெரிவித்தது.
தைப்பூசக் கடைகளுக்கான விற்பனை நேற்று தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள பெரிங்கின் மண்டபத்தில் சுமூகமான முறையில் நடைபெற்றது.
அனைத்து வர்த்தகர்களும் அனுமதி நிபந்தனைகளை கடைபிடிப்பதை உறுதிசெய்ய நகராண்மைக் கழகம் எப்போதும் கள கண்காணிப்பை அமல்படுத்தும்.
சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தொற்று நோய்கள் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க விற்பனைக்கு வைக்கப்படும் உணவின் தூய்மை மற்றும் தரத்தை உறுதி செய்ய வணிகர்கள் நினைவூட்டப்படுகிறார்கள் என்று நகராண்மைக்கழகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது.
முன்னதாக, தைப்பூசத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கேடிஎம் இலவச இரயில் சேவையை வழங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். இந்த சேவை பிப்ரவரி 9 முதல் 12 வரை தினமும் 24 மணி நேரமும் வழங்கப்படும்.


