ஜோகூர் பாரு, பிப் 6- கடந்தாண்டு போதைப் பொருள் கடத்தல்
கும்பல்களைச் சேர்ந்த 99 உறுப்பினர்களைக் கைது செய்து 1 கோடியே 73
லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல்
செய்ததன் மூலம் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு
வந்த 25 கும்பல்களின் நடவடிக்கையை தாங்கள் முறியடித்துள்ளதாக
போலீசார் நம்புகின்றனர்.
ஓப் ஜாரிங் 12 நடவடிக்கையின் மூலம் 1 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம்
வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல்
செய்யப்பட்டது ஜோகூர் மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவின்
சாதனைகளில் ஒன்றாக விளங்குகிறது என்று மாநில போலீஸ் தலைவர்
டத்தோ எம்.குமார் கூறினார்.
கடந்தாண்டு மே மாதம் 24ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த
நடவடிக்கையில் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல்
முறியடிக்கப்பட்டதோடு 14 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டதாக
அவர் சொன்னார்.
மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு
21,093 அதிரடிச் சோதனைகளை நடத்தியதோடு 46,878 பேரிடமும்
பரிசோதனை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
போதைப் பொருளைக் கடத்தும் மற்றும் பதுக்கும் கும்பல்களை
முறிடிப்பதில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
கடப்பாட்டை மாநில காவல் துறை கொண்டுள்ளது என்று அவர் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்.
போதைப் பொருளை தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளை
தடுப்பதற்காக பெல்டா, தனியார் தோட்டங்கள், மக்கள் வீடமைப்பு பகுதிகள்
(பிபிஆர்) மலிவு விலை வீடமைப்பு பகுதிகள், பஸ் மற்றும் முனையங்களை இலக்காக க் கொண்டு தாங்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஓப்
ஜாரிங் நடவடிக்கையில் உள்நாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்
முறியடிக்கப்பட்டதோடு 2 கோடியே 85 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி
மதிப்புள்ள போதைப் பொருள் மற்றும் சொத்துகள் பறிமுதல்
செய்யப்பட்டன என்றார் அவர்.


