கோத்தா பாரு, பிப். 5 - நாரதிவாட்டில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து தாய்லாந்திற்குச் செல்லத் திட்டமிடும் மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் அதேவேளையில் அந்நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சம்பவங்களையும் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட் வலியுறுத்தினார்.
மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் கிளந்தான் மாநிலம் இருப்பதால் அம்மாநில குடியிருப்பாளர்கள் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்வது ஒரு வழக்கமான நடவடிக்கையாகிவிட்டது.
இருப்பினும், குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் கணிக்க முடியாதவை. கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களில் சில மலேசியர்கள் காயமடைந்துள்ளனர். எனவே, பயணிகள் விழிப்புடன் இருக்கவும், தாய்லாந்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள கிளந்தான் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஒன்றுகூடும் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
தாய்லாந்து நாட்டின் சட்டங்களை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் மலேசியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் முகமது யூசோப் நினைவூட்டினார். ஏனெனில் அவர்களுக்கு உதவுவதில் மலேசிய அரசாங்கத்திற்கு சிக்கல்கள் மற்றும் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
நாரதிவாட்டில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.


