ஷா ஆலம், பிப். 5 - ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள வெள்ளத் தடுப்புத் திட்டம் செத்தியா ஆலம் வட்டாரத்திலுள்ள சுமார் 200,000 குடியிருப்பாளர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் பதினைந்து கோடி வெள்ளி செலவிலான இத்திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் செத்தியா ஆலமில் அடிக்கடி ஏற்பட்டு வரும் திடீர் வெள்ளப் பிரச்சனையை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் சுங்கை பிஞ்சாய் மற்றும் சுங்கை பூலோ ஆகியவை இரு ஆறுகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு சமீப காலமாக வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அதைக் கணிப்பது கடினமாக உள்ளது. ஒருவேளை துரித மேம்பாடும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் வளர்ச்சியையும் இயற்கையையும் மட்டும் குறை சொல்ல முடியாது. நாம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு செத்தியா ஆலம் வெள்ளத் தடுப்புத் திட்டம் குறித்த பொது கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இங்குள்ள கான்கார்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் மற்றும் ஷா ஆலம் டத்தோ டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் உள்ளிட்ட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
பல தரப்பினரின் ஒத்துழைப்பு தேவைப்படும் பொதுப் பயன்பாட்டுப் பகுதிகள் மற்றும் மேம்பாட்டை உள்ளடக்கிய பல ஆபத்தான இடங்களை மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளது என்று கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினருமான நஜ்வான் தெரிவித்தார்.
வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் நிலையான வடிகால் கட்டுமானம் மற்றும் நீர்த்தேக்கங்களை விரிவுபடுத்துதல் ஆகியவையும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.
இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் நிலையான வடிகால் அமைப்பை அறிமுகப்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.


