கோலாலம்பூர், பிப். 5 - சுமார் 980 கோடி வெள்ளி மதிப்பிலான உத்தேச
கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலை திட்டம் (எல்.பி.டி.3) இன்னும்
பரிசீலனை நிலையில் உள்ளதோடு அது குறித்து இறுதி முடிவு எதுவும்
எடுக்கப்படவில்லை என்று மக்களவையில் இன்று கூறப்பட்டது.
கோல திரங்கானுவின் கம்போங் கெமுரோ மற்றும் கிளந்தான்
மாநிலத்தின் கோத்தா பாருவிலுள்ள கம்போங் துஞ்சோங்கை இணைக்கும்
இந்த டோல் கட்டண விரைவுச்சாலை நிர்மாணிப்பு குறித்து விரிவான
மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்று துணைப் பொதுப்பணி அமைச்சர்
டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் கூறினார்.
இந்த திட்டத்திற்கான குத்தகை இன்னும் வழங்கப்படவில்லை. பரிந்துரை
கோரிக்கை நடைமுறையை முதலில் செயல்படுத்த வேண்டியுள்ளது. அதே
சமயம், ஒப்பந்த நிறுவனத்தின் நலன்களையும் கருத்தில் கொள்ள
வேண்டியுள்ளது. அந்த விரைவுச்சாலையின் தொடக்கம் முதல் இறுதி
வரையிலான பகுதிக்கு விதிக்கப்படும் 70 வெள்ளி டோல் கட்டணம்
பொருத்தமானதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது என்று அவர்
சொன்னார்.
தற்போது நாட்டிலுள்ள 33 டோல் கட்டண ஒப்பந்த நிறுவனங்கள்
அனைத்தும் லாபத்தை ஈட்டவில்லை. சில நிறுவனங்கள் இழப்பை
எதிர்நோக்கி வருகின்றன. அதன் காரணமாகவே எல்.பி.டி.3 திட்டம் குறித்து
ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று மக்களவையில் இன்று கேள்வி
நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
எல்.பி.டி.3 திட்டத்திற்கு நிதியளிப்பதில் வெளிப்படைத் தன்மை நிலவுவதை
உறுதி செய்வதில் அரசாங்கத்திற்கு உள்ள கடப்பாடு மற்றும் கிழக்கு கரை
மாநிலங்களில் புதிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டம் குறித்து
கோல கிராய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் அப்துல் லத்திப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய துணைக் கேள்விக்கு டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் இவ்வாறு பதிலளித்தார்.


