ரெம்பாவ், பிப். 5 - நான்கு சக்கர இயக்க வாகனத்திலிருந்து கழன்று விழுந்த
மாற்று சக்கரத்தை மோட்டார் சைக்கிள் மோதியதில் அதனை ஓட்டிச்
சென்ற மெக்கானிக் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஐந்து வாகனங்களை உட்படுத்திய இந்த விபத்து வடக்கு தெற்கு
நெடுஞ்சாலையின் 232.1வது கிலோ மீட்டரின் தெற்கு தடத்தில் நேற்று
பின்னிரவு 12.20 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தின் காரணமாக தலையில் பலத்தக் காயங்களுக்குள்ளான
முகமது தாக்கியுடின் ஜூல்கிப்ளி (வயத 35) சம்பவ இடத்திலேயே
உயிரிழந்ததாக ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
ஷேக் அப்துல் காடிர் ஷேக் முகமது கூறினார்.
மோட்டார் சைக்கிள், பஸ், லோரி, நான்கு சக்கர இயக்க வாகனம் மற்றும்
கார் உள்ளிட்ட வாகனங்களை உள்ளடக்கிய இந்த விபத்தில் மேலும் ஆறு
பேர் காயங்களுக்குள்ளானதாகக் கூறிய அவர், அவர்களில் இடுப்பு எலும்பு
முறிவுக்கு ஆளான 36 வயது பஸ் ஓட்டுநர் சிகிச்சைக்காக அலோர் காஜா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொன்னார்.
கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்
ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த
லோரியை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தின் எதிரொலியாக அவ்விரு வாகனங்களும் சாலையின்
வலது பக்கத்தில் கவிழ்ந்தன. பின்னாள் வந்து கொண்டிருந்த டோயோட்டா
ஹைலக்ஸ் நான்கு சக்கர வாகனமும் பிஎம்டபள்யு காரும் அந்த பஸ்சின்
பின்புறம் மோதின. இந்த விபத்தின் காரணமாக டோயோட்டா ஹைலக்ஸ்
வாகனத்திலிருந்து மாற்று சக்கரம் கழன்று எதிர்த்தடத்தில் விழுந்துள்ளது.
அச்சமயம் சாலையின் அவசரத் தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி அந்த சக்கரத்தை மோதியுள்ளார் என அவர் சொன்னார்.


