NATIONAL

பினாங்கில் 131 ஆண்டு காலம் வரலாறு கொண்ட வெள்ளி இரதம் தயாராகிறது

5 பிப்ரவரி 2025, 7:40 AM
பினாங்கில் 131 ஆண்டு காலம் வரலாறு கொண்ட வெள்ளி இரதம் தயாராகிறது

ஜோர்ஜ்டவுன், பிப் 5 - பினாங்கு தண்ணீர்மலை தைப்பூசத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஊர்வலத்தில், வலம் வருவதற்கு 131 ஆண்டு காலம் வரலாறு கொண்ட வெள்ளி இரதம் தயாராகி கொண்டிருக்கின்றது.

வேலவனின் ஊர்வலத்தில் கம்பீரமாக காட்சியளிப்பதற்காக, இந்த வெள்ளி ரதம் சுத்தம் செய்யப்பட்டு வரும் வேளையில், அதன் தயார்நிலை பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில் அறங்காவலர் டாக்டர் ஏ. நாராயணன் தெரிவித்திருக்கின்றார்.

''ஒவ்வோர் ஆண்டும் இந்த இரத்திற்கு வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொலிவடைய செய்வோம். பழுதானதை மாறுவோம். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் வேலைகள் முடிந்துவிடும். அதன் பின்னர், விளக்குகளை பொறுத்துவோம். இந்த வேலைகளை ஒன்பது பேர் செய்துள்ளனர்,'' என்றார் அவர்.

கடந்த 1894ஆம் ஆண்டு இந்தியா, தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த வெள்ளி ரதம் கப்பல் மூலம் அன்று பினாங்கு மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அன்று தொடங்கி, அந்த ரதம் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், சேதமடைந்த பகுதிகளை மட்டும் மாற்றியமைத்து, புதிய பொலிவை தாங்கள் மெருகேற்றி வைத்திருப்பதாகவும் டாக்டர் ஏ. நாராயணன் குறிப்பிட்டார்.

மாடுகள் கொண்டு இழுத்து வரப்படும் அந்த வெள்ளி ரதம், நீண்ட தூரம் செல்லும் என்பதால், இழுத்து வரும் மாடுகள் சோர்வடையாமல் இருக்க, 17 ஜோடி காளை மாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

''முதலில் வரும் ஜோடி ஒரு கிலோ மீட்டருக்குதான் செல்லும். அதன் பின்னர் ஓய்வு கொடுப்போம். உணவுகள் வழங்குவோம். முழுமையாக பயன்படுத்தி அதனை சோர்வடைய விடமாட்டோம்,'' என்றார் அவர்.

எதிர்வரும் பிப்ரவரி 10ஆம் தேதி லெபோ பினாங்கில் உள்ள நகரத்தார் கோவில் வீடு ஆலயத்திலிருந்து புறப்படும் வெள்ளி ரதம், ஊர்வலமாக சென்று நள்ளிரவு மணி 12-க்குள் நாட்டுக் கோட்டை செட்டியார் கோயிலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.