புத்ராஜெயா, பிப். 5 - செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் பல மாடி வாகன நிறுத்துமிடத்தில் நேற்று நிகழ்ந்த கார் விபத்துக்கு ஓட்டுநரின் அலட்சியம்தான் காரணம் தவிர இதில் எந்த நாசவேலையும் இல்லை.
நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் 39 வயது நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா டபள்யு.ஆர்.-வி ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து 3பி தளத்திலுள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நோர்ஹிசாம் பஹாமன் கூறினார்.
இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என்பதோடு இச்சம்பவத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. காரின் ஓட்டுநர் தற்செயலாக எண்ணெய் பெடலை அழுத்தியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. தனது சொந்த அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டது என்பதை ஓட்டுநர் ஒப்புக்கொண்டார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த மோதல் காரணமாக தடுப்புச் சுவர் சேதமடைந்தது. உடைந்த காங்கிரீட் பாகங்கள் கீழே நிறுத்தப்பட்டிருந்த டோயோட்டா அவன்சா கார் மீது விழுந்தன.
இச்சம்பவம் தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1) இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நோர்ஹிசாம் கூறினார்.
முன்னதாக, மருத்துவமனையின் பல மாடி வாகன நிறுத்துமிடத்தின் சுவரை கார் ஒன்று மோதி நிற்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது


