பெட்டாலிங் ஜெயா, பிப் 5 - சீனப் புத்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப் செலாமாட் 23 நடவடிக்கை, சாலை விபத்துகள் மற்றும் வீடு புகுந்து திருடும் குற்றங்களை கணிசமாகக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்கு நீடித்த இந்நடவடிக்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சாலை விபத்துகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு குறைந்திருப்பதாக தேசியக் காவல்துறை படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
''2024-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்புடைய விபத்துகளின் எண்ணிக்கை 104 விபத்துக்களுடன் ஒப்பிடும்போது, தற்போது 64-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், 2024 ஆண்டு பதிவான 117 இறப்புகளுடன் ஒப்பிடும்போது, இறப்புகளின் எண்ணிக்கை 66-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை, சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒப் செலாமாட் 23 பாராட்டு விழாவில் உரையாற்றும்போது, டான் ஶ்ரீ ரசாருடின் இவ்வாறு கூறினார்.
சாலை விபத்துகளில், அதிகமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் உயிரிழப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் ஒப் செலாமாட் 21-இல் பதிவு செய்யப்பட்ட 82 பேருடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு 47 பேர் உயிரிழந்துள்ளதாக ரசாருடின் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைவான சம்மன்களே வெளியிடப்பட்டன. இது, போக்குவரத்து சட்டங்களை பின்பற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வை காட்டுவதாக அவர் கூறினார்.


