ஷா ஆலம், பிப். 5 - அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.ஏ.ஜே.)
ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை இங்குள்ள தாமான் மெலாவத்தியில்
நடத்தப்பட்ட கழிவுப் பொருள்களை காசாக்கும் திட்டத்தின் கீழ் 2.5 டன்
மறுசுழற்சி பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
வழங்கப்படும் மறுசுழற்சிப் பொருள்களுக்கு ஏற்ப பொருத்தமான
வெகுமதிகளை வழங்கும் இந்த திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து
சிறப்பான வரவேற்பு கிடைத்ததாக நகராண்மைக் கழகம் அறிக்கை
ஒன்றில் கூறியது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக மறுசுழற்சிப் பொருள்களை
முறையாக நிர்வகிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில்
சுமார் 100 குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு பொருள்களை
ஒப்படைத்தனர் என அது குறிப்பிட்டது.
பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மறுசுழறசிப் பொருள்களில் மின்
கழிவுகள் (மின்சார மற்றும் மின்னியல் பொருள்கள்), பயன்படுத்தப்பட்ட
சமையல் எண்ணெய் ஆகியவையும் அடங்கும் என அந்த அறிக்கை
தெரிவித்தது.
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட 24
மண்டலங்களிலும் உள்ள பகுதிகளில் இத்தகைய திட்டத்தை அதிகளவில்
தாங்கள் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் நகராண்மைக் கழகம் கூறியது.


