புத்ராஜெயா, பிப். 5 - இவ்வாண்டு சீனப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த
மாதம் 25 முதல் இம்மாதம் 2 வரை அமல்படுத்தப்பட்ட பெருநாள் கால
விலை உச்சவரம்புத் திட்ட அமலாக்கத்தின் போது வர்த்தக வளாகங்கள்
மீது 6,007 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது 108 மொத்த வியாபார மையங்களும் 5,899
சில்லறை வர்த்தக மையங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கப்
பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.
இக்காலக்கட்டத்தில் விலைப்பட்டியல் வைக்காதது மற்றும் இளம் சிவப்பு
விலைப்பட்டியல் இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக 483 குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டு 21,942.85 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்
செய்யப்பட்டன என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
தெரிவித்தார்.
இந்த விலை உச்சவரம்புத் திட்ட அமலாக்க காலத்தின் போது
பொருள்களை அதிக விலையில் விற்றது தொடர்பில் எந்த வழக்கும் பதிவு
செய்யப்படவில்லை என்பதோடு பொதுமக்களிடமிருந்தும் அத்தகைய
புகார்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.
இந்த விலை உச்சவரம்புத் திட்டம் அமலாக்கம் கண்டது முதல் விலை
உச்சவரம்பு விதிகளை வணிர்கள் பின்பற்றியது இச்சோதனையில் தெரிய
வந்தது என்றார் அவர்.
இந்த விலை உச்சவரம்பு திட்டம் ஒன்பது நாட்களுக்கு அதாவது
பெருநாளுக்கு நான்கு நாட்கள் முன்னதாகவும் பெருநாள் தினத்தன்றும்
பெருநாளுக்குப் பின்னர் நான்கு நாட்களும் அமலில் இருந்தன.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 16 வகையான பொருள்களுக்கு
விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.


