ANTARABANGSA

காஸா போர் நிறுத்தம்: இரண்டாம் கட்டப் பேச்சு தொடக்கம்

5 பிப்ரவரி 2025, 4:55 AM
காஸா போர் நிறுத்தம்: இரண்டாம் கட்டப் பேச்சு தொடக்கம்

காஸா நகர், பிப். 5 - காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடங்கியுள்ளதை பாலஸ்தீன ஹமாஸ்  குழு செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர்புகள் தொடங்கியுள்ளன. மேலும் காஸாவில் உள்ள எங்கள் மக்களின் வாழ்க்கைக்கான மறுநிர்மாணிப்பு,  பாதுகாப்பு, உதவி மற்றும் இதர முயற்சிகளில் எங்கள் கவனம் உள்ளது என்று அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் அப்டில் லத்தீப் அல்-கனூவா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள மனிதாபிமான நெறிமுறையை அமல்படுத்துவதை  இஸ்ரேல் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

மனிதாபிமான பாதுகாப்பு மற்றும் உதவி ஆகியவை இஸ்ரேலால் தாமதப்படுத்தப்பட முடியாத அவசர முன்னுரிமைகள் என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேலியப் போரினால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு காஸாவை மீண்டும் மறுநிர்மாணிப்பு செய்ய  மருத்துவமனைகளை கட்டுதல், சாலைகளை நிர்மாணித்தல் மற்றும் நீர் கிணறுகளை சீர்செய்தல் போன்ற பணிகள் முக்கியம் என்று கானூவா வலியுறுத்தினார்.

காஸா ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து விவாதிக்க இந்த வார இறுதியில் கட்டாருக்கு பேச்சுவார்த்தை குழுவை அனுப்பப்போவதாக இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை  தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் குறித்து குழு விவாதிப்பதாக  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் கடந்த  திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தன.  ஆனால் செவ்வாயன்று டிரம்புடனான சந்திப்பு முடியும்வரை தனது பேச்சுவார்த்தைக் குழுவை டோஹாவிற்கு அனுப்ப வேண்டாம் என்று நெதான்யாகு முடிவு செய்தார்.

கடந்த ஜனவரி 19ஆம் தேதி  காஸாவில் ஆறு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 47,500 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று அந்தப் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய இஸ்ரேலியப் போர் நிறுத்தப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.