பிந்துலு, பிப். 5 - கடந்த ஒரு வாரமாக தாக்கிய வெள்ளத்திலிருந்து பிந்துலு கிட்டத்தட்ட முழுமையாக மீண்டுள்ளது.
இருப்பினும், இன்னும் பல பகுதிகளை தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதாக பிந்துலு 5வது மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் பிந்துலு வான் கமருடின் வான் அகமது கூறினார்.
கம்போங் ஜெபாக் மற்றும் கம்போங் கெமுண்டிங் ஆகியவை இன்னும் கண்காணிக்கப்படும் பகுதிகளில் அடங்கும் என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
வெள்ளம் காரணமாக பல வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் அந்த இடங்கள் இன்னும் கண்காணிக்கப்பட வேண்டியுள்ளது. மற்ற பகுதிகளில் நீர்மட்டம் முற்றிலுமாகக் குறைந்துவிட்டது என அவர் கூறினார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி பிந்துலுவில் தொடங்கிய வெள்ளப் பேரிடர் குறித்து கருத்து தெரிவித்த வான் கமாருடின், இந்நகரத்தைச் சுற்றியுள்ள 48 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை பாதுகாப்பான வெளியேற்ற உதவியதோடு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் பணியையும் பிந்துலு தீயணைப்புத் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இன்று காலை நிலவரப்படி, பிந்துலுவில் உள்ள ஏழு தற்காலிக நிவாரண மையங்களில் மொத்தம் 1,966 பேர் இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


