புத்ராஜெயா, பிப். 5 - காங்கோ ஜனநாயகக் குடியரசில் (மோனுஸ்கோ) ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியின் கீழ் பணியாற்றும் மலேசிய அமைதிகாப்புப் படையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் பாதுகாப்பு நிலைமையை தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விஸ்மா புத்ரா கூறியது.
அங்கு நிலைமையை மதிப்பிடுவதற்கும் நாட்டில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காங்கோ ஜனநாயகக் குடியரசினால் அங்கீகாரம் பெற்ற நமீபியாவில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் அமைச்சு ஒத்துழைக்கிறது.
காங்கோ ஜனநாயகக் குடியரசுக்குப் பயணிக்க விரும்பும் மலேசியர்கள் அங்கு பாதுகாப்பு நிலைமை சீராடையும் வரை தங்கள் பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூதரக உதவிக்கு, மலேசியர்கள் நமீபியாவின் விண்ட்ஹோக்கில் உள்ள மலேசிய தூதரகத்தை (+264-61) 259 342 / (+264-61) 259 344 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது mwwindhoek@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் .
விஸ்மா புத்ரா அந்த நாட்டில் சமீபத்திய மேம்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான ஆகக்கடைசி நிலவரங்களை வழங்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


