கோலாலம்பூர், பிப் 5: தேசிய சேவை பயிற்சித் திட்டம் 3.0-ஐ செயல்படுத்துவதற்கான செலவு முந்தைய இரண்டு தொடர்களை காட்டிலும் குறைவாக உள்ளது. இதில் ஒரு பயிற்சியாளருக்கான மொத்த செலவு 2,000 ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
71,300 பங்கேற்பாளர்களை உட்படுத்திய பி.எல்.கே.என் 1.0-ஐ செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு 56 கோடியே 50 லட்சம் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டதாகவும், 20,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய பி.எல்.கே.என் 2.0-ஐ செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு 36 கோடியே 10 லட்சம் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டதாகவும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலேட் நோர்டின் தெரிவித்தார்.
''ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்களை உள்ளடக்கவிருக்கும் பி.எல்.கே.என் 3.0-ஐ செயல்படுத்துவதற்கு ஆண்டுக்கு 20 கோடி ரிங்கிட் தேவைப்படும். ஏனெனில், இத்திட்டம் மலேசிய இராணுவப் படை முகாம்களில் மட்டும் செயல்படுத்தப்படாது. மாறாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் பொலிடெக்னிக்கிலும் செயல்படுத்தப்படும்,'' என்றார் அவர்.
மக்களவை கேள்வி பதில் நேரத்தின்போது டத்தோ ஶ்ரீ முஹமட் காலேட் அவ்வாறு கூறினார்.


