சிகிஞ்சான், பிப். 4 - இங்குள்ள சுங்கை லெமான் தேசிய பள்ளிக்கு முன்புறம் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான மேம்பாலம் கட்டுவதற்கு அரசாங்கம் ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இதன் கட்டுமானப் பணிகள் வரும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதோடு அதிக கனரக வாகனங்களும் இதனைப் பயன்படுத்துவதால் இங்கு மேம்பால நிர்மாணிப்பு அவசியமாகிறது. நேற்று இந்த இடத்திற்கு அருகில் ஒரு மரண விபத்து ஏற்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அருகில் ஒரு பள்ளி, ஒரு மசூதி மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த திட்டம் இப்பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்தும் அதேவேளையில் போக்குவரத்தையும் சீராக்கும் என அவர் சொன்னார்.
நேற்று சுங்கை பெசார்-சபாக் பெர்ணம் சாலையில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான மேம்பால கட்டுமான இடத்தை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
நில அளவீடு மற்றும் மண் ஆய்வு பணிகள் முடிந்த பிறகு ஆண்டு இறுதியில் டெண்டர் திறக்கப்படும் என்று நந்தா தெரிவித்தார்.
இதற்கிடையில், சபாக் பெர்ணமில் எப்.டி.05 கூட்டரசு சாலையில் 30 லட்சம் வெள்ளி செலவில் சாலை பராமரிப்பு உட்பட பல திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் இந்த ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளதாக நந்தா அறிவித்தார்.
சாலை பழுதுபார்ப்பு மற்றும் வடிகால் அமைப்பு பணிகளுக்கு 22 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியும் சூரிய சக்தியில் இயங்கும் (சோலார்) சாலை விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை பழுதுபார்க்க 750,000 வெள்ளியும் செலவிடப்படும் என்று அவர் கூறினார்.


