(ஆர்.ராஜா)
கிள்ளான், பிப். 4 - தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இலவச கே.டி.எம். ரயில் சேவையை வழங்கிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் கெரெத்தாப்பி தானா மெலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) நிறுவன நிர்வாகத்திற்கு தைப்பூசப் பணிக்குழுவின் சார்பாக தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
பத்துமலை மற்றும் இதர கோயில்களுக்கு செல்லும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்க இந்த முயற்சி ஒரு முக்கியமான படியாகும். இது தைப்பூசத்திற்காக திரளாக கூடியுள்ள பக்தர்கள் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் பயணிக்க உதவும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
இந்த திருநாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதை கருத்தில் கொண்டு கே.டி.எம்.பி. வழங்கும் இந்த இலவச ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்துமாறு பக்தர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த இலவச சேவையை பயன்படுத்திக்கொள்ள நாங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறோம். இது போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வசதியான பயண அனுபவத்தையும் வழங்கும். பொது போக்குவரத்தை பயன்படுத்துவது வாகன நிறுத்துமிடச் சிக்கல்களை குறைக்கும். போக்குவரத்து நெரிசலால் நேரம் வீணாகாது, மேலும் பக்தர்கள் தங்கள் ஆன்மீகச் செயல்பாடுகளில் முழுமையாக கவனம் செலுத்தும் வாய்ப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்த இலவச ரயில் சேவையை முதன்மை போக்குவரத்து முறையாக பயன்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என டாக்டர் குணராஜ் கேட்டுக்கொண்டார்.


