கோலாலம்பூர், பிப் 4 - நெல் உற்பத்தியை கணிசமாக உயர்த்தியுள்ள சிகிஞ்சானில் பயன்படுத்தப்படும் வெற்றிகரமான விவசாய முறைகளை கெடா, பெர்லிஸ், கிளந்தான் மற்றும் திரங்கானு போன்ற பிற மாநிலங்களிலும் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த மாநிலங்களில் அரிசி உற்பத்தி சிகிஞ்சானை விட கணிசமான அளவு குறைவாக இருப்பதால் இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இங்கு உற்பத்தி மிக முக்கிய விஷயமாக உள்ளது. சிலாங்கூர் மற்றும் கெடாவில் அரிசி மகசூல் இடைவெளி மிக அதிகமாக இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்க நாம் பாடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அதிக மகசூல் தரும் நெல் விதைகள், உரங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை நுட்பங்கள் சிகிஞ்சானில் பயன்படுத்துவது உட்பட பல நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதில் செம்பனை துறையில் சைம் டார்பி செயல்படுத்தியதைப் போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் ஆகிய பயன்பாடும் அடங்கும் என்று அவர் இன்று மக்களவையில் அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஆலா செகிஞ்சான் திட்டம், பெரிய அளவிலான விவேக நெல் வயல் (ஸ்மார்ட் எஸ்.பி.பி.) மற்றும் அதிக மகசூல் தரும் நெல் விதைகள் போன்ற முயற்சிகள் எவ்வாறு அரிசி உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும் என்று சுங்கை பட்டாணி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் முகமது தவுபிக் ஜோஹாரி எழுப்பிய துணை கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, இம்மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரிசி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தைத் தொடங்க மூடா வேளாண் மேம்பாட்டு ஆணையத்திற்கு அரசாங்கம் 100 கோடி மானியம் வழங்குவதாக அன்வார் அறிவித்தார்.
நெல் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான நில மேலாண்மை முயற்சிகளில் ஒத்துழைப்பு நல்கிய கெடா அரசாங்கத்திற்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
கெடாவில் அரிசி விநியோக மோசடி தொடர்பான சமீபத்திய செய்திகள் குறித்து கருத்துரைத்த பிரதமர், இந்த விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை தாம் அமலாக்க நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


