கோலாலம்பூர், பிப். 4 - அமெரிக்காவின் உத்தேச வர்த்தக வரி விதிப்பின் தாக்கத்திற்காக காத்திருப்பதற்குப் பதிலாக சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற பிற நாடுகளுடன் மலேசியா தீவிரமாக வர்த்தக உறவுகளை உருவாக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரிகளுக்காகக் காத்திருப்பது மலேசியாவுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கனடா மற்றும் மெக்சிகோ மீதான வரிகளை 30 நாட்கள் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் அவர் கூறினார்.
சீனா மீதான அமெரிக்க வரி விதிப்பு இன்னும் அமலுக்கு வர உள்ளன. பல புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் இருப்பதால் மலேசியா வரிகளை எதிர்கொள்வதில் அவசரமாகச் செயல்பட முடியாது என்று அன்வார் கூறினார்.
எங்கள் பங்காக, வர்த்தக பங்காளிகளுடன் விரிவான வலையமைப்பை தீவிரமாகத் திறப்பதற்காக நாம் ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


