ஷா ஆலம், பிப். 4 - எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கும் மின்சாரக் கட்டண உயர்வு 85 விழுக்காட்டு குடியிருப்புகளைப் பாதிக்காது. மாறாக தொழில்துறை மற்றும் பணக்காரர்களுக்கு மட்டுமே இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.
எரிபொருள் பரிமாற்றத்தின் ஏற்றத்தாழ்வு செலவு (ஐ.சி.பி.டி.) செயல்முறையின் கீழ் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக மக்களவையில் இன்று பிரதமரின் கேள்வி நேரத்தின் போதுடத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு நாட்டிற்கானதோ அல்லது மக்களுக்கானதோ அல்ல, மாறாக அது தொழில்துறைக்கானது. அதுவும் 14 விழுக்காடுகூட இல்லை. தொழில்துறைக்கும் செல்வந்தர்களுக்கும் கட்டணம் அதிகரிக்கிறது. இல்லையென்றால் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான ஒதுக்கீட்டை எவ்வாறு அதிகரிக்க முடியும்? பணம் எங்கே கிடைக்கும்?
நான் மீண்டும் கூறுகிறேன், தொழில்துறைக்கான மின்சாரக் கட்டண உயர்வு ஜூலை மாதம் தொடங்கி ஐ.சி.பி.டி. முறையின் கீழ் அமல்படுத்தப்படும்.
இந்த கட்டண உயர்வால் 85 விழுக்காட்டு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அமல்படுத்தப்படும் மின்சாரக் கட்டண அதிகரிப்பு வணிக சமூகத்திற்கு சுமையை அல்லது பாதிப்பை விளைவிக்காது என்று நேற்று நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது அன்வார் உறுதியளித்தார்.
முன்னதாக, 2025 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் தீபகற்ப மலேசியாவில் அடிப்படை மின்சார கட்டணம் 14.2 சதவீதம் அதிகரித்து 45.62 சென்/கிலோவாட் ஆக உயரும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


