கோலாலம்பூர், பிப் 4: கிழக்கு கடற்கரையோரம் அல்லது அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களில் மட்டும் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனமான நட்மா, இனி கவனம் செலுத்தப் போவதில்லை.மாறாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்தும்.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை கணிப்பிற்கு ஏற்ப சொத்துடைமைகளை மீட்பதற்கும் குடியிருப்பாளர்களை இடமாற்றம் செய்வதற்கும், முன் ஏற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ கைருல் ஷாரில் இட்ருஸ் தெரிவித்தார்.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஜனவரி முதல் மார்ச் மாதம் இறுதி வரையில் முக்கியமான காலகட்டம் என்று டத்தோ கைருல் விவரித்தார்.
மாநில திட்டமிடல் மேலாண்மைக் குழு, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசியக் பொது தற்காப்புப் படை மற்றும் அரச மலேசிய காவல்துறை படைபோன்ற பிற அரசு நிறுவனங்களின் உதவியுடன் ஆள்பலமும் வசதிகளும் போதுமானதாக உள்ளதாக கைருல் குறிப்பிட்டார்.


