கோலாலம்பூர், பிப். 4 -- சபாவில் உள்ள சண்டகான் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
தெலுபிட், பெலுரான் மற்றும் சண்டகான் மாவட்டங்கள் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படும் என்று இன்று அதிகாலை 5.45 மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கையில் அத்துறை தெரிவித்தது.
மேலும் சரவா மாநிலத்தின் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு மற்றும் முக்காவை உள்ளடக்கிய பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை எச்சரிக்கையை அது விடுத்துள்ளது.
சபாவைப் பொறுத்தவரை மேற்குக் கடற்கரை (ரனாவ் மற்றும் கோட்டா பெலுட்), சண்டகான் (கினாபாத்தாங்கன்) மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளுக்கு தொடர் மழை எச்சரிக்கையை அத்துறை வெளியிட்டது.
பொதுமக்கள் வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், மைசுவாச்சா மோபைல் செயலி மற்றும் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் மூலம் சமீபத்திய வானிலை தொடர்பான தகவல்களைப் பெறலாம். மேலும் தகவல்களுக்கு 1-300-22-1638 என்ற எண்ணில் மலேசியா வானிலை ஆய்வுத் துறையின் ஹாட்லைனையும் தொடர்பு கொள்ளலாம்.


