புத்ராஜெயா, பிப். 4 - அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசாங்கத் துறை
முகப்பிடங்களில் உள்ள பணியாளர்களுக்கு இன்று முதல் பணி சுழல்
முறை அமல்படுத்தப்படுகிறது. அரசாங்கச் சேவைத் தரத்தை
வலுப்படுத்துவது மற்றும் முகப்பிடங்களில் சேவைகளை மேம்படுத்துவது
ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த திட்டம்
அமல்படுத்தப்படுகிறது.
முகப்பிடப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துவது, பணி ஆற்றல்
பல்வகைப்படுத்தப்படுவதை உறுதி செய்வது, வாடிக்கையாளர் சேவை
அனுபவத்தை அதிகரிப்பது உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த
திட்டம் செயல்படுத்தப்படுவதாக பொதுச் சேவை துறையின் தலைமை
இயக்குநர் டான்ஸ்ரீ வான் அகமது டாஹ்லான் அப்துல் அஜிஸ் கூறினார்.
மக்களின் தேவைக்கு ஏற்ப பணி முறை ஆக்ககரமானதாகவும் உடனடியாக
பதிலளிக்கக் கூடியதாகவும் இருப்பதற்குரிய சூழலை உருவாக்கும்
நோக்கில் பொதுச் சேவைத் துறையில் சீர்திருத்தத்தை உருவாக்கும்
அரசாங்கத்தின் நோக்கத்திற்கேற்பவும் இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது
என அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழல் முறை பணித் திட்டம் மக்களுக்கு நேரடியாக சேவை
வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சு, கல்வியமைச்சு, சுகாதார
அமைச்சு, மனித வள அமைச்சு உள்பட பல்வேறு அமைச்சுகளிலும்
அமல்படுத்தப்படும்.
தங்களின் பணிகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் பல்வேறு
கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு ஏதுவாக முகப்பிட பணியாளர்களுக்கு
பல்வேறு அம்சங்களில் உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.
இந்த முகப்பிட பணி சுழல் முறை பொதுச் சேவைத் துறை தொடர்ந்து
வலுப்பெறுவதற்கும் வாடிக்கையாளர்கள் புதிய அனுபவத்தைப்
பெறுவதற்கும் உதவும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


