கோலாலம்பூர், பிப். 4 - இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும்
தைப்பூச விழாவின் போது பத்துமலை திருத்தலத்தில் 12 லட்சம் முதல் 15
லட்சம் பக்தர்கள் வரை திரள்வர் என எதிர்பார்க்கப்படும் வேளையில்
பக்தர்களின் வசதிக்காக மருத்துவ மற்றும் அவரச உதவிச் சேவைகள்
தரம் உயர்த்தப்படும்.
அவசர காலச் சேவைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி
செய்வதற்கு ஏதுவாக தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின்
உத்தரவுக்கேற்ப தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு கட்டுப்பாட்டு மையம்
பத்துமலையில் உருவாக்கப்பட்டுள்ளதாக 2025 பத்துமலைத் தைப்பூச
விழாவுக்கான மருத்துவ மற்றும் அவசரச் சேவைப் பிரிவுத் தலைவர்
டத்தோ ஏ.டி. குமரராஜா கூறினார்.
பெரும் எண்ணிக்கையில் திரளும் பக்தர்களின் நலனைக் காக்கும்
நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த தைப்பூச விழாவின் போது மருத்துவ உதவிகளை செலாயாங்
மருத்துவமனையின் அவரச சிகிச்சைக்கு குழு வழங்கும். பத்துமலை
முதன்மை வழிபாட்டு மையமாக விளங்குவதால் அவரச உதவிகள்
தேவைப்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு தாங்கள் முழு தயார்
நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
செலாயாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவ
நிபுணர் டாக்டர் நபில் முகமது அலி குடோஸ் 2025 தைப்பூச மருத்துவக்
கமாண்டாராக பொறுப்பேற்கிறார். எட்டு மருத்துவமனைகள், ஒன்பது அரசு
நிறுவனங்கள், சீருடை அமைப்புகள் மற்றும் தன்னார்வ மருத்துவர்களை
உள்ளடக்கிய இந்த அவசரச் சேவைத் திட்டத்தை டாக்டர் நபில் கடந்த
பத்தாண்டுகளாக தலைமையேற்று வழி நடத்தி வருகிறார் என்றார் அவர்.
இந்த அவசர மருத்துவச் சேவையில் மலேசிய செம்பிறைச் சங்கம்,
கூட்டரசு பிரதேச சென்ட். ஜோன் அம்புலன்ஸ், கே.டி.எம்.பி. பெர்ஹாட்,
மலேசியர் தன்னார்வ அவசர சேவைச் சங்கம் (பி.கே.எஸ்.எம்.), மலேசிய
இந்திய தன்னார்வ ஆம்புலன்ஸ் சங்கம், தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறை, தேசிய இரத்த மையம் ஆகிய தரப்பினரும் இணைந்துள்ளனர்
என்று குமரராஜா குறிப்பிட்டார்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,500 உறுப்பினர்கள்
பத்துமலையில் சேவையில் ஈடுபடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.


