கோலாலம்பூர், பிப். 4 - மின்சாரக் கட்டண உயர்வு வர்த்தக சமூகத்திற்கு சுமையாக இருக்காது. 85 விழுக்காடு குடியிருப்புகள் தொடர்ந்து மானியங்களைப் பெறும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணங்களில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் வர்த்தக சமூகத்திற்கு சுமையை அல்லது பாதிப்பை விளைவிக்காது என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
மலேசிய சீன வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் நேற்று ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இந்த உத்தேச கட்டண மறுசீரமைப்பினால் பாதிக்கப்படாது என்றும் வலியுறுத்தினார்.
தற்போது, அரசாங்கம் 85 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார மானியங்களை வழங்குகிறது.
மலேசியாவில் அடிப்படை மின்சாரக் கட்டணம், ஊக்கத்தொகை அடிப்படையிலான ஒழுங்குமுறை (ஐ.பி.ஆர்.) கட்டமைப்பின் கீழ் எரிசக்தி ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை மறு ஆய்வு செய்யப்படுகிறது.
எரிபொருள் விலையில் ஏற்படும் உண்மையான மாற்றங்களின் அடிப்படையில் மின்சார கட்டணங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. இதன், அடுத்த கட்டண மறுஆய்வு எதிர்வரும் ஜூலை மாதம் நடத்தப்படும்.


