(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப். 4 - சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
நேற்று பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தானத்திற்கு வருகை
மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தைப்பூச
முன்னேற்பாடுகளைப் பார்வையிட்டார்.
இம்மாதம் 11ஆம் தேதி தைப்பூசத் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்
தைப்பூச வளாகத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து
விவாதிப்பதற்காக தேவஸ்தான நிர்வாகத்தினருடன் அவர் சந்திப்பும்
நடத்தினார்.
இந்த சந்திப்பில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோஸ்ரீ எம்.சரவணன், தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா
மற்றும் ஆலய அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது பத்துமலைத் திருத்தலத்தில் மின்கட்டு படிக்கட்டுகள்
மற்றும் பல்நோக்கு மண்டபம் அமைக்கும் ஆலயத் திட்டம் குறித்து மந்திரி
புசாருக்கு ஆலய நிர்வாகத்தினர் விளக்கமளித்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி புசார், மக்களுக்கு குறிப்பாக பக்தர்களுக்கு பெரும் பயனைத் தரக்கூடிய இவ்விரு
திட்டங்கள் தொடர்பான திட்டமிடல் அனுமதி கோரி விண்ணப்பிக்கும்படி
ஆலய நிர்வாகத்தை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.
அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் மின் படிகட்டுகள் மற்றும் மண்டப
நிர்மாணிப்புக்கு உரிய அனுமதி வழஙகப்படும் எனக்கூறிய அவர், இதன்
மூலம் ஆலயத்தில் சமய நடவடிக்கைகளை மேலும் ஆக்ககரமான
முறையில் மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார்.
பத்துமலைத் திருத்தலம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுப்பயணிகளின்
ஈர்ப்புக்குரிய ஒரு மையமாக விளங்குவதால் சுற்றுலாத் துறையை
ஊக்குவிப்பதற்குரிய வாய்ப்பினையும் இத்திட்டங்கள் வழங்கும் என்றார்
அவர்.
இம்மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூச விழாவை
முன்னிட்டு நாடு முழுவதுமிருந்து சுமார் பத்து லட்சம் பக்தர்கள் இங்கு
திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களின் வசதி மற்றும்
பாதுகாப்புக்காக உரிய ஏற்பாடுகளைச் செய்வது அவசியம் என்றும் அவர்
சொன்னார்.


