தாவாவ், பிப். 4 - தொழில்கல்வி கல்லூரி மாணவர் ஒருவரை படுகொலை
செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 13 சக மாணவர்களை எதிர்வாதம்
செய்ய அழைப்பதா? இல்லையா? என்பதை இங்குள்ள உயர் நீதிமன்றம்
எதிர்வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முடிவு செய்யும்.
நேற்று ஜூம் செயலி வாயிலாக இரு தரப்பு வழக்கறிஞர்களும் சமர்ப்பித்த
வாதத் தொகுப்பைச் செவிமடுத்தப் பின்னர் நீதிபதி டுங்கன் சிகிடோல்
இந்த வழக்கு தொடர்பான தனது முடிவை வரும் 28ஆம் தேதி
வழங்குவதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 12
நாட்களுக்கு நடைபெற்றது. மொத்தம் 25 சாட்சிகள் இந்த வழக்கில்
சாட்சியங்களை வழங்கினர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 16 முதல் 19 வயது வரையிலான
அந்த 13 மாணவர்களுக்கும் எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம்
உள்ளதை நீதிபதி கண்டறியும் பட்சத்தில் அவர்கள் எதிர்வாதம் செய்ய
அழைக்கப்படுவர். இல்லையேல், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர்.
லஹாட் டத்து தொழில் கல்வி கல்லூரி மாணவரான முகமது நஸ்மி அஜிசாட் முகமது நஸ்ருள் அஸ்வானை கடந்தாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி இரவு 9.00 மணிக்கும் மறுநாள் காலை 7.38 மணிக்கும் இடையே படுகொலை செய்ததாக அம்மாணவர்கள்
அனைவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு
மற்றும் அதே சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத்
தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கும் குறையாத சிறைத்தண்டனை
மற்றும் 12 பிரம்படிகள் வழங்கப்படும்.


