சைபர்ஜெயா, பிப் 3: இவ்வாண்டு தொடங்கத்தில் பல்வேறு சமூக ஊடக தளங்களிலிருந்து 1,200-க்கும் மேற்பட்ட போலி செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை வரையில், 1,575 உள்ளடக்கங்களை நீக்குவதற்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) விண்ணப்பித்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொடர்பு அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''அந்த மொத்த எண்ணிக்கையில், 1,233 போலிச் செய்தி உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட தளம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த உள்ளடக்கம் நீக்கப்பட்டால், அது போலிச் செய்தி என்பதை அத்தளமும் ஒப்புக்கொள்வதாக அர்த்தமாகிறது,'' என்றார் அவர்.
இதனிடையே, கடந்த ஆண்டில் நீக்கப்பட்ட போலி செய்திகளின் எண்ணிக்கை குறித்து வினவப்பட்டபோது, பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து 19,500-க்கும் மேற்பட்ட உள்ளடக்கங்களை நீக்குமாறு எம்சிஎம்சி கோரியுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.
அந்த எண்ணிக்கையில் இருந்து, 17,200 உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
2020-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரையில், 25,114 போலி செய்திகள் சம்பந்தப்பட்ட சமூக ஊடக தளங்களிலிருந்து நீக்கப்பட்டவுள்ளதாகவும் ஃபஹ்மி விவரித்தார்.


