அலோர்ஸ்டார், பிப். 3 - சமீபத்திய பள்ளி விடுமுறை மற்றும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மொத்தம் 164,612 பயணிகள் கோல கெடா-லங்காவி-கோல பெர்லிஸ் வழித்தடத்தில் படகுச் சேவையைப் பயன்படுத்தினர்.
கடந்த ஜனவரி 16 முதல் நேற்று வரை பதிவு செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும் என்று கான்சோர்டியம் பெர்ரி லைன் வெஞ்சர்ஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் செயல்முறை நிர்வாகி நோர்ஹாபிஷ் அப்துல் வாஹிட் கூறினார்.
லங்காவியில் இருந்து கோல கெடா வரை படகு சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 31,117 பேராகவும் கோல கெடாவிலிருந்து லங்காவிக்கு பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை 33,708 பேர் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், லங்காவி- கோல பெர்லிஸ் பயணத் தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை 48,784 பேராகவும் கோல பெர்லிஸ்- லங்காவி தடத்தில் பயணிகள் எண்ணிக்கை 51,003 பேராகவும் இருந்தது என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அதே காலகட்டத்தில், கூடுதலாக 49 படகுப் பயணச் சேவைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் லங்காவி முதல் கோலா கெடா வரையிலான தடத்திலும் கோல கெடாவிலிருந்து லங்காவி வரையிலும் தடத்திலும் தலா எட்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.
லங்காவி முதல் கோல பெர்லிஸ் வரையிலான வழித்தடத்திற்கு கூடுதலாக 17 படகு சேவைகளும் கோல பெர்லிஸிலிருந்து லங்காவி தடத்தில் கூடுதலாக 16 பயணங்களும் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.


