(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப் 3 - இங்குள்ள செக்சன் 23, அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன்
திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகத்தைக் கண்ட இந்த
ஆலயத்திற்கு இது இரண்டாவது திருக்குட நன்னீராட்டு விழாவாக
விளங்குகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கும்பாபிஷேக
விழாவில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த், சிங் டியோ, மனித வளம்
மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பராய்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்
சம்புநாதன் உள்ளிட் பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கோபிந்த் சிங், பல்லின மக்கள்
வாழும் மலேசியாவில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பன்முக
கலாச்சாரம் கட்டிக்காப்படுவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
சமய சுதந்திரத்தைக் கட்டிக்காப்பதில் அரசாங்கம் எப்போதும் உறுதியான
கடப்பாட்டைக் கொண்டுள்ளதோடு அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும்
சமய விழாக்கள் கொண்டாடப்படுவதை உறுதி செய்து வருகிறது என்றார்.
ஒவ்வொரு விழாவும் ஆசியையும் சுபிட்சத்தையும் வழங்குவதோடு
பல்லின மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் உதவுகிறது என்று
அவர் சொன்னார்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகவியல் துறைகளில்
ஆக்கத்திறனளிப்பதில் இலக்கவியல் தொழில்நுட்பம் முக்கிய பங்கினை
ஆற்றுகிறது என்றும் அவர் கூறினார்.
சுங்கை ரெங்கம் தோட்டத்தின் முதல் பிரிவில் கடந்த 1918ஆம் ஆண்டு
நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம் ஷா ஆலம் நகர் உருவாக்கத்தின்
காரணமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கடந்த 2011ஆம் ஆண்டு
செக்ஷன் 23 பகுதிக்கு இட மாற்றம் கண்டது.
ஷா ஆலம் வட்டார இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலங்களில்
விளங்கி வரும் இந்த ஆலயத்தில் சமய நிகழ்வுகளோடு பல்வேறு சமூக
மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


