கோலாலம்பூர், பிப். 3 - உயர் தொழில்நுட்பம் இலக்கவியல் துறைகளில்
அந்நிய முதலீடுகளை அதிகப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும்
முயற்சிகளுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம்
பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இலக்கவியல் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை
வலுப்படுத்துவது, இணைய பாதுகாப்பை மேம்படுத்துவது, புதிய
தொழில்நுட்பத்தை ஏற்பது ஆகியவற்றிலும் அரசு கவனம் செலுத்த
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், நிர்வாக நடைமுறை போன்ற
பிரச்சினைகளைக் கையாள்வதற்கு ஏதுவாக திறன்மிக்க மற்றும்
வெளிப்படையான இலக்கவியல் தொழில்நுட்பம் அரசுத் துறையில்
மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் நான்காம்
தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து
உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தி வர
வேண்டும் என்றும் மாமன்னர் தமதுரையில் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி குறித்த மனநிறைவு
தெரிவித்த மாமன்னர், அந்த வளர்ச்சியின் பலன்களை ஒரு சிலர்
மட்டுமல்லாது அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டும் என்றார்.
உள்நாட்டு வளர்ச்சி உள்பட நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து
வரும் முதலீடுகள், ரிங்கிட் மதிப்பு மீட்சி மற்றும் குறைந்த வேலையில்லா
விகிதம் ஆகிய மேம்பாடுகள் குறித்து நான் நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.
கடந்தாண்டு பல்வேறு துறைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.9
விழுக்காடாக இருந்தது. அதே சமயம், முதல் ஒன்பது மாதங்களில்
வர்த்தக மதிப்பு 2 டிரிலியன் வெள்ளியைத் தாண்டியது என அவர்
கூறினார்.


