ஷா ஆலம், பிப். 3 - இன்று நடைபெற்ற பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரின் தொடக்க விழாவிற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாட்டின் அன்று 17 வது மாமன்னராகப் பதவியேற்ற பிறகு சுல்தான் இப்ராஹி தலைமையேற்கும் இரண்டாவது நாடாளுமன்ற திறப்பு விழா இதுவாகும் என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
இன்று காலை 10.10 மணியளவில் நாடாளுமன்றம் வந்தடைந்த மாமன்னரை மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் மற்றும் மேலவை சபாநாயகர் டத்தோ அவாங் பெமி அவாங் அலி பாஷா ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


