கோலாலம்பூர், பிப். 3- வெள்ளம் காரணமாக சரவாக்கில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை சற்று குறைந்துள்ளது. அதே சமயம் சபாவில் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது.
சரவாக் மாநிலத்தில் நேற்றிரவு 10,104ஆக இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணிக்கு 10,068 பேராகக் குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் 46 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பிந்துலுவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,901 பேராகவும் செரியன் (செரியன், சிபுரான் மற்றும் பலாய் ரிங்கின் மாவட்டங்கள்) 1,744 பேராகவும் உள்ளதாக சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகத்தின் கூறியது.
சமரஹான் (சமராஹான், அசஜயா, செபுயாவ், சிமுஞ்சான் மற்றும் கெடாங் மாவட்டங்கள்) வட்டாரத்தில் திறக்கப்பட்ட புதிய நிவாரண மையத்தில் 743 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சிபு பிரிவில் (சிபு, செலங்காவ் மற்றும் கானோவிட் மாவட்டங்கள்) மொத்தம் 1,147 பேர் துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
சபா மாநிலத்தில் இன்று காலை 55 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இந்த எண்ணிக்கை 41 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேராக இருந்ததாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்தது.
நேற்றிரவு கினபாத்தாங்கானில் புதிதாக ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது. இதில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 41 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


